அலட்சியம் தவிர்த்து அக்கறை காட்டுங்கள்!

195

எப்போது பார்த்தாலும் பெண்கள் நலம் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறோம். குழந்தைகள் நலம் பற்றியும் அடிக்கடி பேசுகிறோம். ஆனால், ஆண்கள் பற்றி நாம் அதிகம் பேசுவதில்லை. ஏதோ பெண்கள் யாருமே தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறையே காட்டுவதில்லை போலவும், ஆண்கள் மட்டும் எப்போதும் அதில் அக்கறையோடு இருப்பது போலவும் நினைக்கச் செய்கிற மாயை இது. உண்மையில் ஆண்கள் தங்கள் உடல்நலனில் அக்கறை இல்லாதவர்களாகவும், அலட்சிய குணம் அதிகம் கொண்டவர்களாகவுமே இருக்கிறார்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பிரச்னைகள் ஏதேனும் உடல்நலனில் ஏற்பட்டாலும் அதில் அக்கறை செலுத்தும் குணமும் ஆண்களுக்கு இல்லை. ‘இது சும்மா சாதாரண கட்டிதானே…’ ‘தூங்கி எழுந்தா தலைவலி சரி ஆகிடும்…’ என்பது போன்ற சமரசங்கள் ஆண்களிடம் அதிகம் காணப்படுகிறது என்றே தங்கள் அனுபவங்களில் இருந்து பல்வேறு மருத்துவர்களும் கூறுகிறார்கள். இத்துடன் உடல்நலம் தொடர்பாக பல்வேறு மூட நம்பிக்கைகள் கொண்டவர்களாகவும் ஆண்கள் இருக்கிறார்கள் என்று தலையில் அழுத்தமாக கொட்டு வைக்கிறது பல நவீன ஆராய்ச்சிகள்.

குடும்பத்தின் மிக முக்கிய பாத்திரத்தை ஓர் ஆண் வகிக்கிறான். சமூகத்திலும் அவனது பங்கு குறிப்பிடத்தகுந்த வகையில் உள்ளது. எனவே, ஓர் ஆண் நோய்வாய்ப்பட்டாலோ அல்லது உயிரிழந்தாலோ அந்த குடும்பம் மிகவும் நிலைகுலைந்து போவதையும் பார்க்கிறோம். கேள்விப்படுகிறோம். எனவே, ஆண் என்பவன் ஒரு குடும்பத்துக்கும், சமூகத்துக்கும் மிகவும் முக்கியமான சொத்து.

இந்த பொறுப்பை உணர்ந்து ஓர் ஆண் தன்னைப் பாதுகாத்துக் கொள்வது மிகவும் அவசியம். எனவே, ஆண்கள் தவறாக என்னென்ன விஷயங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதையும், அதேநேரம் நிஜ நிலவரம் என்னவென்பதையும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.முக்கியமாக, Strictly for Male என்று கட்டுரையின் டிஸ்க்ரிப்ஷன் சொன்னாலும், இது ஆண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களின் நலம் விரும்பிகளான பெண்களுக்குமான சிறப்பு கட்டுரைதான்.

மேட்டர்:ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதில் ஆண், பெண் இருவருமே ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள். இதில் என்ன வித்தியாசம் இருக்கப் போகிறது என்றுதான் தோன்றும். ஆனால், விஷயம் வேறு.

இன்னும் சொல்லப் போனால் ஆண்களுக்கு ஆரோக்கிய விஷயத்தில் அக்கறை ரொம்பவும் குறைவு என்றே சொல்ல வேண்டும். ஆரோக்கியம் என்கிற விஷயத்தில் ஆண்களுக்கு இருக்கும் சில தவறான நம்பிக்கைகள் பற்றியும் அவற்றுக்கான விளக்கங்கள் பற்றியும் பார்ப்போமா?

எனக்கு எந்த பிரச்னையும் வராது!எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கிறேன்… ஆக்டிவாக இருக்கிறேன். எனக்கு எந்த பிரச்னையும் வராது. வருடாந்திர ஹெல்த் செக்கப் எதுவும் எனக்குத் தேவையில்லை என நினைக்கிற ஆண்கள் பலர்.இது மிகவும் தவறு.

வேலை இடைவேளைகளில் கொறிக்கிற சிப்ஸையும், மணிக்கொரு முறை குடிக்கிற காஃபி, டீயையும் குறைக்க வேண்டும், சிகரெட்டை நிறுத்த வேண்டும், எப்போதாவது குடிக்கிற மதுவையும் விட்டு விலக வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இவை எல்லாமே அவர்களது ஆரோக்கியத்தை பாதிக்கிற விஷயங்கள்தான். உணவுப் பழக்கம் முதல் வாழ்க்கை முறை வரை எல்லாம் சரிதானா என்பதைத் தெரிந்துகொள்ள 6 மாதங்களுக்கொரு முறை மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.

ஹார்ட் அட்டாக்கெல்லாம் வயதானவர்களுக்கே வரும் தாத்தாவுக்கும், அப்பாவுக்கும்தான் ஹார்ட் அட்டாக் வரும். தனக்கு வராது. காரணம் தன் வயது என்கிற எண்ணமும் பல ஆண்களுக்கு உண்டு.இதுவும் முற்றிலும் தவறு. வயதானவர்களுக்குத்தான் மாரடைப்பு வரும் என்கிற நிலையெல்லாம் மாறி பல வருடங்கள் ஆகிறது.

இன்று 30 பிளஸ்சில் இருக்கும் ஆண்களுக்கும் அந்த ஆபத்து நிகழலாம். அதுவும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். குடும்பப் பின்னணியில் இதய நோய்கள் இருந்தால் அந்த ஆபத்துக்கான வாய்ப்புகள் இன்னும் அதிகம். உணவு முதல் உடற்பயிற்சி வரை கவனம் தேவை. மன அழுத்தம் என்கிற பிசாசிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள வேண்டியது முக்கியம். வருடம் ஒருமுறை இதயம் நலமா என உறுதி செய்து கொள்வதும் நல்லது.

குறட்டையா… நானா? சான்ஸே இல்லை!

இப்படிச் சொல்கிற ஆணா நீங்கள்? நீங்கள் குறட்டை விடுவதாகச் சொல்கிறவர்களை நம்ப மறுக்கிறீர்கள்தானே? குறட்டைக்கும் வயதுக்கும் தொடர்பில்லை என்பதை அறிவீர்களா? உங்கள் குறட்டைப் பழக்கத்தின் பின்னணியில் Sleep Apnea என்கிற மாபெரும் பிரச்னை காரணமாக இருக்கலாம். அது உங்கள் ரத்த அழுத்தத்தைத் தாறுமாறாக்கி, இதய நோய்களுக்கும் வழி வகுக்கலாம். தூக்கத்தில் உங்கள் சுவாசம் சில நொடிகள் நின்றுபோகவும் காரணமாகலாம். எனவே, கவனம் தேவை.

நான் ஆம்பிளை…

இப்படிச் சொல்லிக்கொண்டு திரிகிற பலருக்கும் திருமணத்துக்குப் பிறகு தாம்பத்திய உறவில் பிரச்னைகள் ஏற்படுகின்றன. தலைவலி, வயிற்றுவலிக்கு மருத்துவரைப் பார்த்து சிகிச்சை மேற்கொள்ள எப்போதாவது தயங்கியிருக்கிறீர்களா? அப்படித்தான் இல்லற வாழ்க்கை தொடர்பான பிரச்னைகளும். அது உங்கள் துணையும் சம்பந்தப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். சின்ன ஊடல் முதல் நிரந்தரப் பிரிவு வரை காரணமாகக் கூடிய சாதாரண பிரச்னைக்கு ஆரம்பத்திலேயே தீர்வு காண்பதுதான் ஆண்மைக்கு அழகு.

ஆண்கள் அழுவதில்லை…

உண்மைதான். அப்படி சொல்லித்தான் அவர்கள் வளர்க்கப்படுகிறார்கள். அழுதால் தவறு என்கிற எண்ணத்தில் எல்லா உணர்ச்சிகளையும் உள்ளுக்குள்ளேயே போட்டு அழுத்தி வைத்துக் கொள்கிறார்கள். அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறது. ஸ்ட்ரெஸ் என்று சொல்லிக்கொள்வதையேகூட அவர்கள் தர்மசங்கடமாகவே நினைக்கிறார்கள். அதுவும் தவறே.

மன அழுத்தம் போக்கும் ஆரோக்கியமான வழிகளை ஆண்களும் பழக வேண்டியது அவசியம். உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதில் தயக்கம் காட்டவும் தேவையில்லை. மருத்துவரீதியான ஆலோசனைகள் தேவையென்றால் அதற்கும் தயாராகலாம், தவறில்லை.

ஒரு நாளைக்கு எத்தனை முறை?

ஒருநாளில் பகலிலும், இரவிலுமாக எத்தனை முறை சிறுநீர் கழிக்கிறீர்கள்? அதையெல்லாம் யார் கணக்கு வைப்பது என்கிறீர்களா? ஒருநாளைக்கு பகலில் 8 முறைக்கு மேலும், இரவில் 2 முறையும் சிறுநீர் கழிக்க வேண்டி வந்தால் அது ஏதோ கோளாறின் அறிகுறியாக இருக்கலாம். நீரிழிவு இருக்கிறதா, சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருக்குமா என மருத்துவரைப் பார்த்து உறுதி செய்து கொள்வதே பாதுகாப்பானது.

பழங்களும் காய்கறிகளும் பெண்களுக்கு மட்டுமில்லை பழங்களும், காய்கறிகளும் சாப்பிட்டால் சருமம் அழகாகும், உடல் இளைக்கும் என்றெல்லாம் பெண்களுக்கு அறிவுறுத்தப்படுவதைப் போல ஆண்களுக்குச் சொல்லப்படுவதில்லை.

ஆரோக்கியம் என்பது பொதுவானதே!

ஆண்கள் என்றால் எப்போதும் டீ கடையில் பஜ்ஜியும், சமோசாவும் சாப்பிட்டுப் பசியைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்றில்லையே. பசிக்கிறபோது அவர்களும் பச்சைக் காய்கறிகளையும், பழங்களையும் சாப்பிடுகிற பழக்கத்தை வளர்த்துக் கொள்ளலாம். அழகும், ஆரோக்கியமும் அவர்களுக்கும் நீடிக்கட்டும்.

நட்பு நல்லது வேண்டும் எத்தனை வயதானாலும் ஆண்கள் தங்கள் நட்பை விட்டுக் கொடுப்பதில்லை. அது நல்ல விஷயம்தான். ஆனால், அந்த நட்பு வட்டத்தில் சிகரெட் அல்லது குடிப்பழக்கம் உள்ளவர்கள் இருந்தால் அவர்களை விலக்கி வைப்பதே சிறப்பு. எப்போதோ ஒருநாள்தானே குடிக்கிறோம் என்கிற சமாதானங்கள் அவர்களை அவர்களே ஏமாற்றிக் கொள்வதற்கானவை!