2 குழந்தைகளை நீரில் அமுக்கி கொலை செய்த கொடூர தாய்: நாடகமாடியது அம்பலம்

149

தமிழகத்தில் 2 குழந்தைகள் மர்மமாக உயிரிழந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தாயாரை பொலிசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   கடலூர் மாவட்டத்தின் கட்டமுத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சிலம்பரசன்.   இவரது மனைவி ஜெயசித்ரா (27). இவர்களுக்கு மிதுன் (4) என்ற மகனும், லட்சன் என்ற 8 மாத கைக்குழந்தையும் இருந்தன. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் லட்சன் வீட்டில் இருந்த தண்ணீரில் பிணமாக கிடந்தான்.

அப்போது தாய் ஜெயச்சித்ரா தலைமறைவாகி விட்டார். பின்னர் அவரை பொலிஸ் பிடித்து விசாரித்த போது குழந்தை லட்சன் தவறி தண்ணீரில் விழுந்து இறந்தான் என கூறினார்.இதனால் பொலிசார் அவரை விட்டுவிட்டனர்.

இந்த சோக சம்பவத்திற்கு பிறகு சிலம்பரசன் தனது மனைவி மற்றும் மகன் மிதுனுடன் விழுப்புரம் மாவட்டம் பனங்குப்பத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டுக்கு குடி வந்தார்.  கடந்த 1-ஆம் திகதி சிலம்பரசன் வேலைக்கு சென்றார். வீட்டில் ஜெயசித்ராவும், மிதுனும் இருந்தனர். அப்போது வீட்டின் பின்புறம் இருந்த தண்ணீர் தொட்டியில் சிறுவன் மிதுனும் பிணமாக மிதந்தான். இதையடுத்து ஜெயசித்ரா தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இது குறித்து சிலம்பரசன் பொலிசில் புகார் செய்தார். அதில் எனது 2 குழந்தைகளின் சாவில் ஜெயசித்ரா மீது சந்தேகம் உள்ளது என்று கூறியிருந்தார். இதையடுத்து 2 குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் அமுக்கி ஜெயசித்ரா கொலை செய்திருக்கலாம் என்று பொலிசார் சந்தேகப்பட்டனர். இந்த 2 சம்பவங்களும் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நடந்தது. எனவே 2 மாவட்ட பொலிசாரும் தலைமறைவாக உள்ள ஜெயசித்ராவை பிடிக்க தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் மேல்மருவத்தூர் அருகே ஒரு பகுதியில் ஜெயசித்ரா பதுங்கி இருப்பதாக பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த இடத்துக்கு பொலிசார் விரைந்து சென்று ஜெயசித்ராவை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் அவரை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். இதையடுத்து ஜெயசித்ரா, அவரது தாய், தந்தை மற்றும் உறவினர்களை வளவனூர் அருகே உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.