தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் சோற்றுக்குத் திண்டாடும் மக்கள், கவனம் எடுப்பார்களா அரச அதிகாரிகள் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் கேள்வி

89

கொரோனா என்கிற வைரஸ் பரவலின் காரணமாக உலக நாடுகளே ஸ்தம்பித்துப் போயுள்ள நிலையில், உலக நாடுகளின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. நாடுகளுக்கிடையிலான கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்துக்கள் அனைத்தும் முற்றாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. ஓரிரு நாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் மாத்திரம் விமான சேவைகள் கடும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி இடம்பெறுகிறது.

உலக அளவில் 89,048,345 பேர் இவ் வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும், 1,930,265 பேர் இதுவரையில் உலகளவில் மரணித்துள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் 39,242,554 பேர் மிக அதிகமாக இத்தொற்றினால் பாதிக்கப்பட்டு அங்கு நாளொன்றுக்கான இறப்பு வீதமும் அதிகரித்தவண்ணம் உள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில் அடையாளம் காணப்பட்டவர்களின் எண்ணிக்கை 48,949 ஆக உயர்வடைந்துள்ளதுடன், சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 6,618 எனவும், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 42,091, இதேவேளை இவ் வைரஸ் தொற்றினால் இதுவரையில் 240 பேர் மரணமடைந்திருப்பதாக உத்தியோகபூர்வத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, வவுனியா போன்ற மாவட்டங்களை உள்ளடக்கிய வடமாகாணத்திலும் இவ்வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இலங்கையில் இவ் கொரோனா வைரசின் பரவல் நிலை தொடர்பாகவும், இலங்கை அரசின் செயற்பாடுகள் தொடர்பாகவும், மக்களது நிலை தொடர்பாகவும் அதீத கவனம் எடுக்கவேண்டிய துர்ப்பாக்கிய சூழல் ஏற்பட்டுள்ளது. உலக மக்கள் இவ் அசாதாரண சூழ்நிலை காரணமாக பெரும் துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். பொருளாதாரப் பிரச்சினை தலைதூக்கியுள்ளது. இலங்கையின் மேல் மாகாணத்தில் இவ் வைரசின் தாக்கம் அதிகமாகவும் கொத்தணிகளைக் கொண்டதாகவும் மாற்றம் பெற்றுள்ளது. எனினும் தற்போது இந்நிலைமை நாடு முழுவதும் பரவக்கூடிய அபாய நிலைக்கு வந்துள்ளது. வவுனியாவில் மாத்திரம் திடீரென ஒரு வார காலத்தில் 100க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளதுடன் வவுனியா நகரம் முடக்கநிலையை அடைந்துள்ளது.

அரசினது கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் இன்னமும் நாடு முழுவதும் விஸ்தரிக்கப்படவில்லை என்பதே மக்களதும் எனதும் வருத்தமாகும். வைரஸ் பரவும் அபாய நிலை இருந்தும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை நாட்டுக்குள் அனுமதித்திருப்பது மிகவும் ஆபத்தானது. தனிமைப்படுத்தல் மற்றும் பிரதேசங்களை முடக்கவேண்டிய கட்டாய சூழல் அரசுக்கு காணப்படுகின்றபோதும், தனிமைப்படுத்தல் மற்றும் முடக்கப் பிரதேசங்களுக்குள் வாழும் மக்களது நிலை பற்றியும் அரசு சிந்திக்கவேண்டும். தனிமைப்படுத்தலில் வாழும் மக்களுக்கு இன்னமும் மாவட்ட ரீதியாக உரிய உணவுத்தேவையோ அல்லது பிற சுகாதார வசதிகளோ மேற்கொள்ளப்படாமல் அசமந்தப்போக்கு காணப்படுவதை என்னால் மக்களுடன் உரையாடிய வகையில் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. இம் மக்கள் தமது வேலையை இழந்து பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் இவர்களுக்கு கட்டாயம் அவர்களது அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யவேண்டிய கடப்பாடு அரசுக்கு இருக்கிறது. நாட்டில் இவ் வைரஸ் தொற்று இன்னும் தீவிரமடையவே அதிக வாய்ப்புக்கள் இருப்பதன் காரணமாக அரசினது கொரோனா தடுப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட மக்களது தேவைகள், முடக்கப்பட்ட பிரதேசங்களில் வசிக்கும் மக்களது தேவைகள் தொடர்பில் உரிய முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உரிய வேலைத்திட்டங்கள் விஸ்தரிக்கப்படவேண்டும் என்பதே எனது வேண்டுகோளாகவும், கோரிக்கையாகவும் இருக்கிறது.