அராஜகங்கள் மூலம் தேசப்பற்றை வளர்க்க முடியாது – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வைத்திய கலாநிதியுமான சி.சிவமோகன் அரசுக்கு இடித்துரைப்பு

24

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான தொடர் போராட்ட பேரணியானது நேற்றைய தினம் (3) காலை அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பமாகி பொலிகண்டியில் நிறைவடையவுள்ளதுடன் நேற்றைய நாளின் முடிவில் மட்டக்களப்பின் களுவாஞ்சிக்குடி பகுதியில் நிறைவடைந்திருந்தது. இரண்டாவது நாளான இன்று (4) இப்பேரணி தொடரவுள்ளது.

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்களைக் கடந்துள்ள நிலையில் வடகிழக்கில் பௌத்த மயமாக்கல், திட்டமிட்ட வகையில் தமிழ் மக்களின் பிரதேசங்கள் அபகரிக்கப்படுதல், தொல்லியல் ஆராய்ச்சிகள் என்கிற போர்வையில் தமிழ் மக்களின் வணக்கஸ்தலங்களை அழித்தொழித்து பௌத்த விகாரைகளை பொலிஸ் மற்றும் இராணுவத்தின் பூரண ஆதரவுடன் வடகிழக்கில் நிறுவுகின்ற அடாவடித்தனமான நடவடிக்கைகளில் இன்று அரசு நேரடியாக ஈடுபட்டு வருகின்றது.
நாட்டில் வாழ்கின்ற இனங்களுக்கிடையில் குழப்பங்களை, முரண்பாடுகளை ஏற்படுத்தும் நோக்கில் அரசு தொடர்ந்தும் செயற்பட்டுவரும் அதேவேளை சந்தேகத்தின் பெயரில் இதுவரை எவ்விதக் குற்றங்களும் நிரூபிக்கப்படாமல் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் மூலம் தமிழ் அப்பாவி இளைஞர்களைக் கைது செய்து வருடக்கணக்காக சிறைகளில் அடைத்து வைத்துள்ளனர்.

இவ்வாறு தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிங்கள இனவாதிகளால் அடக்குமுறைகளுக்கு உள்ளாகி வருவதைக் கண்டித்தும், எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நீதியான தீர்வினைக் கோரியும், முஸ்லீம்களின் ஜனாசா விடயத்தில் அரசு நடந்துகொள்ளும் மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்தும் தான் வடகிழக்கில் வாழும் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களால் உணர்வுபூர்வமாக இவ்வார்ப்பாட்டப் பேரணி எதிர்பார்த்ததைப்போல நீதிமன்றத் தடையுத்தரவுகளைப் பெற்றுக்கொண்டு பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப் படையினரின் தடைகளைக் கடந்து, அச்சுறுத்தல்களுடன், ஜெனீவா கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ள சூழ்நிலையில் இவ் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இதேவேளை பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரைக்கும் மட்டுமல்ல, யாழ்ப்பாணம் தொடக்கம் கொழும்பு வரைக்கும் நாட்டை சர்வதேசத்திடம் காட்டிக்கொடுக்கும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால், அவற்றுக்கு ஒருபோதும் அனுமதி வழங்கமாட்டோம், நீதிமன்றங்களின் தடை உத்தரவுகளை எவரும் சவாலுக்குட்படுத்த முடியாது என்ற பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியல் அட்மிரல் சரத் வீரசேகர அவர்களின் கருத்து இனவாத சிந்தனையின் உச்சத்தை மீண்டும் ஒருமுறை உரத்துக் கூறியிருக்கிறது. மக்களது ஜனநாயக செயற்பாடுகளை மறந்து, தனது இராணுவவாத செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஒருவராகவே இவரது கருத்துக்கள் வெளிப்படையாக உணர்த்தி வருகிறது.

தெற்கில் இருந்து வரும் சிங்கள இனவாதிகளால், பௌத்த பிக்குகளால், தொல்லியல் திணைக்களத்தினரால், மகாவலி அபிவித்தி அதிகார சபை என்கிற பெயரால் வடகிழக்கில் தமிழர் பூர்வீக பிரதேசங்கள் அபகரிக்கப்படுகின்ற போதும், சிங்களக் குடியேற்றங்கள், விகாரைகளை புதிதாக உருவாக்கிவருகின்ற போதும், கிழக்கு மாகாணத்தில் தமிழர் மேய்ச்சல் தரைகள் அபகரிக்கப்பட்டு வருகின்றபோதும், தமிழ் – முஸ்லீம் மக்களது வணக்கஸ்தலங்கள் சேதமாக்கப்படுகின்ற போதும், பௌத்த பிக்குகளால் நீதிமன்றங்களின் கட்டளைகள் மீறப்படுகின்றபோதும் வாய்மூடி மௌனமாக இருக்கும் தரப்புக்கள், தமிழ் மக்களின் ஜனநாயக செயற்பாடுகளை தடுக்கும் நோக்கில் செயற்பட்டு வருவதானது, காவல்துறையானது பாரபட்சமாக இந்நாட்டில் செயற்படுகிறதா என்கிற கேள்வியினை எழுப்புகிறது. அரசின் தொடர்ச்சியான இவ்வாறான இனவாதச் சிந்தனையின் உச்சக்கட்டச் செயற்பாடுகளால் இந்நாடு அழிவுப்பாதை நோக்கியே பயணிக்கும் என்பது உறுதி.