அவுஸ்திரேலிய வெள்ளம்: 18,000 பேர் வெளியேற்றம்

106

கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆறுகள் மற்றும் அணைகள் பெருக்கெடுத்து மாநிலத் தலைநகர் சிட்னி மற்றும் தென் கிழக்கு குவின்ஸ்லாந்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

50 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஏற்படக்கூடிய இந்த அனர்த்த நிலை இந்த வாரம் முழுவதும் நீடிக்கும் என்றும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்கும்படியும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

உயிரிழப்புகள் பதிவாகாதபோதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. இது 25 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அவுஸ்திரேலியாவின் மூன்றில் ஒரு பங்கினர் வாழும் பகுதியாகும்.

இதனிடையே, பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிதி உதவி வழங்கப்படும் என்று அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் பேஸ்புக் பக்கத்தில் அறிவித்தார்.

அந்த மாநிலத்தின் 13 பகுதிகளில் வெள்ள ஆபத்து குறித்தும் மக்கள் வெளியேறிவிட வேண்டிய அவசியம் குறித்தும் எச்சரிக்கப்பட்டுள்ளது. பல அணைக்கட்டுகளும் நிரம்பி வழிகின்றன. மீட்பு நிலையங்களில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமி உள்ளனர். சிலர் அனைத்தையும் இழந்துவிட்டதாக கிளப் டாரி என்ற நகரின் தலைமை நிர்வாகி போல் அலன் தொலைக்காட்சியில் தெரிவித்தார்.