அனைத்து பாடசாலைகளும் மார்ச் 29 இல் ஆரம்பம்

115

– புத்தாண்டு விடுமுறைக்கு வழமை போன்று மூடப்படும்

இது வரை திறக்கப்படாத மேல் மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாடசாலைகளின் அனைத்து தரங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் திங்கட்கிழமை, மார்ச் 29ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் (24) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இதனை அறிவித்தார்.

அனைத்து முன்பள்ளிகளையும் குறித்த தினத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கடந்த மார்ச் 15ஆம் திகதி, மேல் மாகாணத்திலுள்ள பாடசாலைகளின் தரம் 05, 11, 13 ஆகிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகி இடம்பெற்று வருவதோடு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஏற்கனவே வழங்கியிருந்த அறிவித்தலுக்கு அமைய, ஏனைய தரங்களுக்கான கல்வி நடவடிக்கைகளை, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி, தமிழ், சிங்கள புத்தாண்டை அடுத்து ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்-19 தொற்றுநோய் பரவல் காரணமாக பாடத்திட்டங்களை நிறைவு செய்வதில் உள்ள சிக்கல்கள் காரணமாக, 2021 A/L மற்றும் தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைகள், வழமை போன்று ஓகஸ்டில் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இவ்வாறு எதிர்வரும் திங்கட்கிழமை (29) திறக்கப்படும் பாடசாலைகள் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறைக்காக வழமை போன்று மூடப்பட்டு மீண்டும் திறக்கப்படும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.