குரு ஜி வார இராசி பலன் 19-07-2021 முதல் 25-07-2021 வரை

43

மேஷம்: வார ஆரம்பமே மேஷராசிக்கு சந்திராஷ்டம தினமாக ஆரம்பித்தாலும், பிற்பகுதியில் சந்திரன் நல்ல அமைப்பில் இருப்பதால் இந்த வாரம் தந்தையின் விஷயத்தில் நன்மைகளும், கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அறப்பணி செய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையால் லாபம் உண்டு. இளைய பருவத்தினருக்கு காதல் அனுபவங்கள் ஏற்படும். ராசிநாதனின் சுப வலுவால் பணவரவு இருக்கும். உங்களில் பரணி நட்சத்திரக்காரர்களின் சிக்கல்களுக்கு தீர்வு கிடைக்கும். புதிதாக ஒரு பொருள் சேர்க்கை உண்டு.

ரிஷபம்: யோகாதிபதி சனி ஒன்பதாமிடத்தில் அமர்ந்து கெடுபலன்களை தர இருக்கும் நிலையில் ராசிநாதன் சுக்கிரனும் செவ்வாயுடன் இணைந்து கை கொடுக்க முடியாத அமைப்பில் பலவீனமாக இருப்பதால் ரிஷபத்திற்கு சுமாரான வாரம் இது. ஆறாமிடத்தை குரு பலம் பெற்றுப் பார்ப்பதால் வேலை, தொழில் போன்ற ஜீவன அமைப்புகளில் கடந்த சில வாரங்களாக இருந்து வந்த தடைகளும் எதிர்மறை அனுபவங்களும் நிவர்த்தியாகி இனிமேல் சிரமங்கள் இல்லை என்ற நிலை உருவாகும். சுப காரியங்களுக்கு இருந்து வந்த தடை விலகும்.

மிதுனம்: ராசிநாதன் புதன் ராசியிலேயே ஆட்சி நிலையில் வலுவாக இருப்பதால் இந்த வாரம் மிதுன ராசிக்காரர்களின் தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகளில் லாபம் வரும். கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சில குறிப்பிட்ட துறையினருக்கு இனிமேல் வாய்ப்புகள் கிடைக்கும். உடல்நலம் சரி இல்லாதவர்கள் ஆரோக்கியம் மேம்படுவார்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சை மற்றவர்கள் கேட்பார்கள். அலுவலகத்தில் மரியாதை இருக்கும். பணிச்சுமை குறையும். மாணவர்கள் ஆன்லைன் படிப்பில் ஆனந்தம் காணுவீர்கள்.

கடகம்: ராசிநாதன் சந்திரன் வார ஆரம்பத்தில் கேதுவுடன் இணைந்து நீச்ச நிலையில் இருந்தாலும் வளர்பிறை நிலையில் இருப்பதும், அவருக்கு வீடு கொடுத்த செவ்வாய் அதி சுபத்துவமாக இரண்டாம் வீட்டில் இருப்பதும் கடகத்திற்கு யோகம் அளிக்கும் அமைப்புகள் என்பதால் இந்த வாரம் உங்களுக்கு எல்லா விஷயங்களிலும் மனமகிழ்ச்சியும் குடும்பத்தில் நல்ல விஷயங்கள் நடப்பதும் இருக்கும். கொரோனாவையும் மீறி லாபம் வரும். நீண்டநாட்களாக நினைத்திருந்த ஒரு காரியம் நடக்கும். அனைத்து தரப்பினருக்கும் நல்ல வாரம் இது.

சிம்மம்: ராசியைக் குரு பார்ப்பதோடு ராசியில் யோகாதிபதி செவ்வாய் அதிர்ஷ்டம் தரும் சுபத்துவ அமைப்பில் சுக்கிரனுடன் இருப்பதால் இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் இருக்கும். வேலை, வியாபாரம் தொழில் லாபத்துடன் இயங்கும். கொரோனாவையும் மீறி பணவரவு இருக்கும். உங்களில் சிலர் பணியிடங்களில் நல்ல பெயர் வாங்குவீர்கள். ராசியில் இருக்கும் சுக்கிர பலத்தால் பெண்கள் உதவுவார்கள். அவர்களால் நன்மைகள் உண்டு. காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் உண்டு. எதையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது.

கன்னி: வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பத்தாமிடத்தில் ஆட்சி நிலையில் இருப்பது கன்னிக்கு கஷ்டங்களை போக்கி, நல்ல நிகழ்சிகளையும், சிரமங்கள் இல்லாத வாரத்தையும் உருவாக்கும். ஆறில் குரு வலுவுடன் இருப்பதால் சிலருக்கு தாமதித்து வந்த நல்ல வேலை இப்போது கிடைக்கும். அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். சிலருக்கு தொழிலில் நல்லவைகள் நடப்பதற்கான ஆரம்பங்கள் இருக்கும். உங்களை முடக்கிப் போட்டுக் கொண்டு இருந்த எதிர்ப்புகள் விலகும். இழுபறியில் இருந்து வந்த விஷயங்கள் செட்டில் ஆகும்.

துலாம்: வாரம் முழுவதும் ராசிநாதன் சுக்கிரன், செவ்வாயுடன் இணைந்து பகை வீட்டில் இருப்பதால் இந்த வாரம் நீங்கள் எதிர்ப்புகளால் சஞ்சலப்படும் வாரமாக இருக்கும். பணியிடங்களில் உங்களைப் பிடிக்காதவர்களின் கை உயரும். சில நேரங்களில் என்ன செய்வது என்று தடுமாற வைக்கக் கூடிய சம்பவங்கள் நடக்கும். முக்கியமான துறைகளில், அதிகார அமைப்புகளில் இருப்பவர்களுக்கு மாற்றங்கள், இருக்கும். உங்களில் சிலருக்கு பங்குச்சந்தை, சூதாட்டம் போன்றவைகள் ஆசை காட்டி மோசம் செய்யும் .உஷார். எவரையும் இப்போது நம்ப வேண்டாம்.

விருச்சிகம்: ராசிநாதன் செவ்வாய் வாரம் முழுவதும் பத்தாம் வீட்டில் இருப்பது சிறப்பு. கூடுதலாக அவர் சுக்கிரனின் இணைவோடு குருவின் பார்வையிலும் உள்ளதால் நெருப்பு சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் விருச்சிக ராசிக்காரர்கள் குறிப்பாக ஓட்டல் நடத்துபவர்கள், கேட்டரிங். டீக்கடை. போன்றவர்களுக்கு இது லாபம் தரும் வாரம். கடந்த சில மாதங்களாக கொரோனாவினால் நல்லவைகள் எதுவும் நடக்காதவர்களுக்கு நன்மைகள் நடக்கும் வாரம் இது. நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ளுங்கள். கடன் கொடுத்தவரை நேரில் சந்தித்து தவணை வாங்கி கொள்வது நல்லது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இது வேதனைகள் எதுவும் இல்லாமல் சாதனைகளை செய்கின்ற வாரம். உங்களில் பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு பின்னடைவுகள் அனைத்தும் விலகிக் கொண்டு வருவதால் வேலை, தொழில், வியாபாரம் போன்ற அமைப்புகளில் இதுவரை இருந்து வந்த மந்தநிலைமை மாறத் துவங்கி, நன்மைகள் நடக்கும். மூலம் நட்சத்திரக்காரர்கள் எந்த ஒரு விஷயத்திலும் நிதானத்தைக் கடைப்பிடியுங்கள். யாரிடமும் கோபப்பட வேண்டாம். உங்களின் வெற்றி வெகுதூரத்தில் இல்லை. அனைத்தும் இனி நல்லபடியாக நடக்கும்.

மகரம்: சந்திரன் நல்ல இடங்களில் இருப்பதால் சிக்கல்கள் எதுவும் இல்லாத வாரம் இது. தனஸ்தானம் குருவின் இருப்பால் வலுப் பெறுவதால் வருமானத்திலும் குறைகள் வரப்போவது இல்லை. பெண் தொழிலாளிகளை கொண்ட தையல், எக்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்களை நடத்துபவர்களுக்கு கொரோனாவையும் மீறி இது நல்ல வாரம். ராசியில் சனி இருப்பதால் இளைஞர்களுக்கு எரிச்சல் படும்படியான சம்பவங்கள் நடக்கும். அடிக்கடி கோபப்படுவீர்கள். வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். குடும்ப பிரச்சனைகளை தள்ளி வையுங்கள்.

கும்பம்: ராசிநாதன் சனி பனிரெண்டில் மறைந்தாலும், ஆட்சி பெற்ற நிலையில் இருக்கிறார். கூடுதலாக இந்த வாரம் செவ்வாய் நன்மை தரும் நிலையை அடைகிறார். சுபமான குருவின் பார்வையும் செவ்வாய்க்கு இருக்கிறது. இது கும்பத்திற்கு நல்லவைகளைத் தரும் அமைப்பு என்பதால் கிடைக்காது என்று கை விட்டுப் போன நிலுவைத் தொகையோ அல்லது ஒரு பாக்கித் தொகையோ உங்களுக்கு கிடைக்கும். கணவன், மனைவி உறவு அன்யோன்யத்துடன் இருக்கும். கொரோனாவினால் இதுவரை இருந்து வந்த அனைத்து தடைகளும் விலகும்.

மீனம்: எதிர்ப்புகளை குறிக்கும் ஆறுக்குடைய சூரியன் ஐந்தில் இருப்பது ஒரு வகையில் நல்ல அமைப்பு. ஆறில் செவ்வாய் சுபத்துவமாக இருப்பதும் மீனத்திற்கு குறைகளைத் தராத ஒரு நிலை. ராசிநாதன் குரு பனிரெண்டில் இருப்பது உங்களுக்கு நன்மைகளைத் தரும் என்பதால் மீனத்திற்கு கவலை தரும் விஷயங்கள் எதுவும் இல்லை. குறிப்பிட்ட ஒரு பலனாக வீண்பழி சுமத்தி வேலை மாற்றம் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்திற்கு திரும்பி வருவீர்கள். வியாபாரிகளுக்கு இதுவரை இருந்து வந்த எதிர்ப்புகளும், போட்டியாளர்களும் விலகுவார்கள்.