குரு ஜி வார இராசி பலன் 02-08-2021 முதல் 08-08-2021 வரை

47

மேஷம்: மேஷ ராசிக்கு வேலை செய்யும் இடங்களிலும், தொழில் அமைப்புகளிலும் உள்ள பிரச்னைகள் தீரும் வாரம் இது. ஏற்கனவே உங்களில் சிலருக்கு பிரச்னைகள் தீருவதற்கான ஆரம்பங்கள் நடக்க ஆரம்பித்து விட்டன. எதிர்காலத்தை நிர்ணயிக்க கூடிய சில விஷயங்களை இப்போது சிலர் செய்வீர்கள். ஒரு சிலருக்கு வீடு அல்லது வாகனம் புதியதாகவோ ஏற்கனவே உள்ளதை மாற்றியோ அமையும். கணவன், மனைவி உறவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நல்ல நிகழ்ச்சிகள் நடக்கும். தந்தை வழி உறவினர்கள் உதவுவார்கள். மகிழ்ச்சி வாரம் இது.

ரிஷபம்: ரிஷபத்திற்கு வீட்டிலும், தொழில் அமைப்புகளிலும் நன்மைகளும், சந்தோஷமான விஷயங்களும் நடக்கும் வாரம் இது. சிலருக்கு பதவி உயர்வு, அல்லது வேலைமாறுதல் உண்டு. கொரோனாவையும் மீறி சரளமான பணப்புழக்கமும், நல்ல வருமானமும் ஏற்படும். தூரத்தில் இருக்கும் மகன், மகளிடமிருந்து நல்ல செய்தி வரும். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். வாழ்க்கைத் துணைவர் மூலம் சந்தோஷமான நிகழ்ச்சிகள் இருக்கும். அலுவலகங்களில் சுமுகமான சூழ்நிலை இருக்கும். மற்றவர்களால் மதிக்கப் படுவீர்கள். மேல் அதிகாரியின் தொந்தரவு இருக்காது.

மிதுனம்: மிதுன ராசிக்கு இது தொல்லைகள் எதுவும் இல்லாமல் பிரச்னைகளுக்கு தீர்வுகள் ஏற்படும் வாரமாக இருக்கும். இளைஞர்கள் வேலைக்காக மிகுந்த அலைச்சல்களில் இருப்பீர்கள். உங்களில் சிலருக்கு இந்த வாரம் குலதெய்வ தரிசனமோ ஞானிகள் தரிசனமோ உண்டு. எதற்கெடுத்தாலும் எரிச்சலும் கோபமும் வருவதற்கு வாய்ப்பு இருப்பதால் கோபத்தைக் கட்டுபடுத்துங்கள். எட்டில் சனி இருப்பதால் வம்பு, வழக்கு, தேவையற்ற வீண்பழி, கைப்பொருள் திருட்டுப் போகுதல், பிடிக்காதவரின் கை ஓங்குதல், வீண்செலவு, அனாவசிய கடன் போன்ற பலன்கள் நடக்கும்.

கடகம்: கடக ராசிக்கு பெரிய குறைகள் இல்லாத வாரம் இது. உங்களில் சிலரின் கணவருக்கோ மனைவிக்கோ எதிர்பாராத நன்மைகள் இருக்கும் வியாபாரிகளுக்கு நன்மைகளும் மறைமுகமான வருமானங்களும் இருக்கும். சகோதரர்களுடன் அனுசரித்துப் போவது நல்லது. ஆயுதங்களை கையில் வைத்து பணிபுரியும் டெய்லர் போன்ற துறையினருக்கு லாபங்கள் உண்டு. அன்னிய இன, மத, மொழிக்காரர்கள் சரியான நேரத்தில் பெரிய உதவிகளை செய்வார்கள். குறிப்பாக இஸ்லாமிய நண்பர்களால் நன்மைகள் இருக்கும். எதையும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பீர்கள்

சிம்மம்: ராசிநாதன் சூரியன் பனிரெண்டில் மறைந்திருப்பதோடு சனியின் பார்வையையும் பெற்றிருப்பதால் எதிலும் நிதானமாக இருக்க வேண்டிய வாரம் இது. அதேநேரத்தில் கொரோனா நிலைமையையும் மீறி கையில் பணப்புழக்கம் இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியும். குடும்பத்தில் சந்தோஷமும் மனைவி, குழந்தைகளுடன் சண்டையிடாமல் இருப்பதும் நடக்கும். ஆறாமிடம் வலுவிழப்பதால் எதிரிகளையும், எதிர்ப்புகளையும் ஜெயிக்க முடியும். கடன்தொல்லைகள் கட்டுக்குள் இருக்கும். பயமுறுத்திக் கொண்டிருந்த கடன்காரர்கள் இனிமேல் உங்கள் மேல் நம்பிக்கை வைப்பார்கள்.

கன்னி: வார ஆரம்பத்தில் ராசிநாதன் புதன் பதினொன்றில் அமர்ந்து தனயோகம் ஏற்படுவதால் கன்னிக்கு இப்போது கொரோனா நிலையையும் மீறி வருமானம் நன்றாக இருக்கும். வியாபாரிகள், விவசாயிகள், பத்திரிக்கை துறையினர், கலைஞர்கள், அரசு, தனியார் துறை ஊழியர்கள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நல்ல பலன்கள் நடக்கும். சூரியன், சனி பார்வையால் சிலருக்கு தந்தை விஷயத்தில் மனச்சங்கடங்கள் இருக்கும். ஒரு சிலருக்கு மட்டும் உறவினர் விஷயத்தில் எதிர்மறை பலன்கள் இருக்கும். வயதானவர்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை.

துலாம்: ராசியும், ராசிநாதனும் குருவின் பாரவையில் இருப்பதால் துலாத்தினர் இல்லத்தில் இந்த வாரம் முழுவதும் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். உற்சாகமாக இருப்பீர்கள். எந்த ஒரு விஷயத்தையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தி ஜெயித்துக் காட்டுவீர்கள். சூரியன் தொழில் ஸ்தானமான பத்தாம் வீட்டில் இருப்பதால் அரசு ஊழியர்கள், அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டவர்கள், காண்ட்ராக்டர்கள் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு நன்மைகள் உண்டு. எப்படியும் எதன்மூலமாகவும் தேவையான அளவிற்கு வருமானங்களும், பணவரவும் இருக்கும் என்பதால் கஷ்டங்கள் எதுவும் இல்லை.

விருச்சிகம்: இந்த வாரத்தில் இரண்டு நாட்கள் சந்திராஷ்டம தினங்கள் என்பதால் இது டல்லான வாரம்தான். அதேநேரத்தில் அடிப்படை விஷயங்களில் நல்ல பலன்களே நடக்கும். சிலருக்கு எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் இழுபறி இருக்கும். வார ஆரம்பத்தில் சந்திரன், ராகு இணைவதால் மனம் ஒருநிலையில் இருக்காது. யாருக்கும் எதுவும் வாக்குத் தருவதற்கும் தயக்கமாக இருக்கும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் கவனமாக இருங்கள். பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. வேலை வியாபாரம் தொழில் போன்ற அமைப்புக்களில் நல்ல பலன்கள் இருக்கும். பணவரவுக்குப் பஞ்சமில்லை.

தனுசு: தனுசில் பிறந்த சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் இந்த வாரம் முழுவதும் நல்ல சூழ்நிலைகள் இருக்கும். கொரோனா நிலைகளையும் மீறி வாரம் முழுவதும் பணவரவும் உண்டு. பனிரெண்டாம் இடம் கேதுவின் இருப்பால் வலுப்பெறுவதால் அலைச்சல்கள் அதிகம் இருக்கும். நிலுவையில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் விலகும். கலைஞர்கள் வளம் பெறுவார்கள். கெடுதல்கள் எதுவும் நடப்பதற்கு வாய்ப்பு இல்லை.

மகரம்: மகர ராசிக்கு இது நல்லதும் கெட்டதும் கலந்த வாரமாக அமையும். பிள்ளைகள் வழியில் மனச்சங்கடங்களும், எதிர்பாராத செலவுகளும் வரும். இரண்டாமிடம் குருவின் இருப்பால் வலுவாக இருப்பதால் பணவரவிற்கு தடை இல்லை. ராசியில் சனி இருப்பதால் நடுத்தர வயதை தாண்டியவர்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது நல்லது. குடும்பத்தில் பாகப்பிரிவினை, சொத்து பிரச்சனை சம்பந்தமாக பேச்சுவார்த்தை இருந்தால் தள்ளி வையுங்கள். புது முயற்சிகள் எதுவும் செய்ய வேண்டாம். யாருக்கும் ஜாமீன் நிற்க வேண்டாம். அலைச்சல்கள் உள்ள வாரம் இது.

கும்பம்: ராசிநாதன் சனி, பனிரெண்டாமிடத்தில் இருப்பதால் இதுவரை வெளிநாட்டுப் படிப்பு, வேலைகளுக்கு முயற்சி செய்து வந்தவர்களுக்கு வெற்றி கிடைக்கும் வாரம் இது. பிள்ளைகள் விஷயத்தில் நல்ல பலன்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்டநாள் நினைத்திருந்த ஒரு காரியம் சாதகமாக நடைபெறும். சிலருக்கு மட்டும் தொழில் விஷயமாக கடுமையான அலைச்சலும், நெருக்கடியும் இருக்கும். வேலை, வியாபாரம், தொழில் விஷயங்களில் இடைஞ்சல்கள்` நீங்கும். உங்களைப் பிடிக்காதவர்களிடம் மனமாற்றம் உண்டாகும். எதிரி நண்பன் ஆவார்.

மீனம்: மீன ராசியில் பிறந்த அரசு ஊழியருக்கு இது நல்லவாரம். காவல்துறை, ராணுவத்தில் இருப்பவர்களுக்கு நல்ல விஷயங்கள் நடக்கும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு அரசு வேலை பற்றிய தகவல்கள் வந்து சேரும். திருமணம் ஆகாதவருக்கு அது உறுதி ஆகும். குடும்பத்தில் சுப காரியம் உண்டு. கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் சந்தோஷத்தை தருவார்கள். சிலருக்கு புத்திர பாக்கியம் உண்டு. விரும்பிய இடங்களுக்கு குடும்பத்துடன் போய் வருவீர்கள். சொத்து பிரச்னை உள்ளவருக்கு சாதகமான தீர்வு கிடைக்கும்.