குரு ஜி வார இராசி பலன் (09-08-2021 முதல் 15-08-2021 வரை)

49

மேஷம்: மேஷத்திற்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கும் வாரம் இது. முடியாமல் இருக்கும் விஷயங்களை இப்போது முடித்துக் காட்டுவீர்கள். உங்களில் அஸ்வினி நட்சத்திரப் பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும். தொழில், வேலை, வியாபாரம் போன்றவைகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் மாற்றங்கள் இருக்கும். வேலை, தொழில், வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் வலுவாவதால் இந்த வாரம் கவலைகள் எதுவும் இல்லை. கொரானாவையும் மீறி பணவரவு நன்றாகவே இருக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்களுக்கு நீண்டநாட்கள் போராடிக்கொண்டு இருந்த ஒரு விஷயம் நல்லபடியாக முடிந்து லாபங்களும், பண வரவும் கிடைக்கும் வாரம் இது. ரியல் எஸ்டேட் செய்பவர்களுக்கு தொழில் சிறிது தேக்கத்தை கொடுத்தாலும் முடிவில் நன்மையாகவே அமையும். ஆறாமிடம் குரு பார்வை பெறுவதால் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். நண்பனைப் போல சிரித்துப் பழகிய ஒருவர் துரோகியாக மாறலாம். செய்யாத குற்றத்திற்கு வீண்பழி வரும் வாய்ப்பு இருக்கிறது. வம்பு வழக்கு வரலாம் என்பதால் யோசித்து செயல் படுவது நல்லது.

மிதுனம்: உங்களில் சிலருக்கு ஏற்கனவே முடிந்து விட்டது என்று நினைத்து நிம்மதியாக இருந்த விஷயங்கள் மீண்டும் கிளறப்படும் வாரம் இது. அடுத்த சில வாரங்களில் நடக்க இருக்கும் அதிசார குரு மாற்றத்தின் மூலம் எட்டில் இருக்கும் சனி சுபத்துவம் அடையப் போவதால் இப்போதுள்ள உங்களின் பிரச்னைகள் தீர ஆரம்பிக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இனி கவலைகளுக்கு இடமில்லை. கடன் பிரச்னைகள் சிலருக்கு தலை குனிவை தரும். உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டியது அவசியம்.

கடகம்: உங்களில் அதிகாரம் செய்யக்கூடிய பதவியில் இருப்பவர்களுக்கு இரண்டுங் கெட்டான் நிலை இருக்கும். சிலர் இரண்டு அதிகார மையத்துடன் போராடுவீர்கள். உங்களைப் புரிந்து கொள்ளாமல் சிலர் உங்களை விட்டு விலகுவார்கள். ஏழாமிடத்தில் இருக்கும் சனி, எட்டாமிட குருவால் ஆன்மிகம் சம்பந்தமான அனுபவங்கள் கிடைக்கும். சிலருக்கு புனிதத்தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு கிடைக்கும். ஞானிகள் தரிசனம் கிடைக்கலாம். குலதெய்வ வழிபாடு செய்யாதவர்கள் மற்றும் நேர்த்திக்கடன் செலுத்தாதவர்கள் இப்போது அவற்றை முடிப்பீர்கள்.

சிம்மம்: இந்த வாரத்தின் பிற்பகுதி நாட்கள் சிம்மத்தினருக்கு நிம்மதியை தரும். இளைஞர்கள் சிலருக்கு பெங்களூர் அல்லது வடக்கே உள்ள நகரங்களில் வேலை கிடைத்துச் செல்ல வேண்டியிருக்கும். எவரிடமும் வாக்குவாதங்களை தவிருங்கள். தந்தைவழி உறவினர்களால் கருத்து வேறுபாடு இருக்கும். பெண்கள் விஷயத்தில் மனக்கசப்புகள் இருக்கும். சிலர் அக்கா தங்கைகளுடன் சண்டை போடுவீர்கள். எதையும் தாமதமாகத்தான் செய்து முடிக்க முடியும். ஆனாலும் எதுவும் எல்லை மீறி போகாமல் பரம்பொருள் காப்பாற்றுவார்.

கன்னி: கன்னி ராசிக்காரர்கள் கடந்த சில வாரங்களாக இருந்து வந்த தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளி வேலைகளை முனைப்புடன் செய்ய வேண்டிய வாரம் இது. சனி ஐந்தில் இருப்பதால் சிலருக்கு வருமானத்தில் தடை இருக்கும். இன்னும் சில வாரங்களில் நடக்க இருக்கும் அதிசார குரு மாற்றம் மூலம் அதிக நன்மையை அடையப்போகும் ராசி கன்னி என்பதால் கவலைக்கு இடமில்லை. பெண்களுக்கு அலுவலகத்திலும் வீட்டிலும் மதிப்புக் கூடும்படியான சம்பவங்கள் இருக்கும்.

துலாம்: உங்களில் சிலருக்கு தாய்வழி சீதனம் போன்று அம்மாவின் மூலம் ஏதேனும் ஒன்று கிடைக்கும் வாரம் இது. யூனிபார்ம் அணிந்து வேலை செய்யும் துறையினரான காவல்துறை, இராணுவம், செக்யூரிட்டி போன்றவர்களுக்கு நல்ல செய்திகள் இருக்கும். எந்த ஒரு விஷயத்தையும் நேர்மையான முறையில் சந்திப்பது நல்லது. துலாம் ராசிக்கு இந்தவாரம் கஷ்டங்கள் என்று எதுவும் இல்லை. அனைத்திலும் நல்லது மட்டுமே நடக்கும். உங்களில் சுவாதி நட்சத்திரக்காரர்களுக்கு உறவில் கசப்புகளும், கருத்து வேற்றுமைகளும் ஏற்படும்.

விருச்சிகம்: ராசிநாதன் செவ்வாய் பத்தில் அமர்ந்து குருபார்வை பெறுவதால் விருச்சிகத்திற்கு இந்த வாரம் எதிலும் வெற்றிதான். அனைத்து சிறப்புக்களும் சேரும் வாரம் இது. உங்களில் அனுஷம் நட்சத்திரத்தைச் சேர்ந்த குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகளுக்கு இப்போது நற்செய்திகள் உண்டு. சிலருக்கு இரட்டைக் குழந்தை அமைப்பு தெரிய வரும். செலவுகளும், வீண் விரயங்களும் உள்ள வாரம் இது. சிலருக்கு அலுவலகங்களில் பாராட்டுக்களும் உயர்நிலையில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் கவனிக்கப்படுதலும் நடக்கும்.

தனுசு: தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அனைத்து விஷயங்களிலும் எவ்வித தடைகளும் இல்லாமல் சுமூகமாகவும், பிரச்னைகள் எதுவும் இல்லாமலும் இருக்கும். தொந்தரவுகள் எதுவும் வராது. பொருளாதார விஷயங்களில் சிக்கல்களை சந்தித்தவர்கள் அது நீங்கி நல்ல வருமானமும், பணவரவுகளும் கிடைக்கப் பெறுவீர்கள். குறிப்பாக பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு இந்த வாரம் வருத்தங்கள் எதையும் தராமல் வசந்தத்தையும், நல்ல வாய்ப்புகளையும் மட்டுமே தரும். தனுசுக்கு இனிக் கஷ்டங்கள் எதுவும் இல்லை.

மகரம்: ஜென்மச் சனியின் காரணத்தால் மகரராசி இளைஞர்களின் தன்னம்பிக்கை பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் வாரம் இது. உங்களில் திருவோணம் நட்சத்திரக் காரர்கள் அதிகமாக அவஸ்தைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இன்னும் சில வாரங்களில் நல்ல மாற்றம் தெரியும். பொறுத்திருங்கள். சிலருக்கு சிறு சிறு உடல்நலப் பிரச்னைகள் வரலாம். நாற்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டி இருக்கும். கடன் வாங்க வேண்டிய சூழல்கள் உருவாகலாம். சற்றுக் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். எதிலும் ஒரு மந்த நிலை இருக்கும்.

கும்பம்: கும்பத்திற்கு குறைகள் எதுவும் இல்லாத வாரம் இது. மூன்றாம் அதிபதி செவ்வாய் குரு பார்வை பெறுவதால் உங்களில் அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு நல்ல பலன்கள் நடக்கும். மந்தமாக இருந்து வந்த தொழில், வியாபாரம் போன்றவைகள் இனிமேல் விறுவிறுப்புடன் செல்லும். கடன் தொல்லைகளால் அவதிப் பட்டவர்களுக்கு பிரச்னைகள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். தாயார் வழியில் நல்ல விஷயங்களும் அம்மாவின் மூலம் ஆதாயங்களும் வரும். தாமதித்து வந்த வேலை வாய்ப்புக்கள் நல்லபடியாக கிடைக்கும்.

மீனம்: மீன ராசி இளைஞர்களின் செயல்திறன் இந்த வாரம் மேம்படும். தெளிவான மன நிலையில் உற்சாகமாக இருப்பீர்கள். கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும். அலுவலகங்களில் தொல்லைகள் இருக்காது. உங்களில் ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வேலை, வியாபாரம் தொழில் போன்றவை லாபத்துடன் இயங்கும். பணவரவு இருக்கும். கலைத்துறையினருக்கு இது நல்ல வாரம். தொழில் இடங்களில் நல்ல பெயர் வாங்கும்படியான சம்பவங்கள் நடக்கும். பெண்கள் உதவுவார்கள்.