குரு ஜி வார இராசி பலன் (16-08-2021 முதல் 22-08-2021)

19

மேஷம்: இந்த வாரம் மேஷ ராசிக்கு அதிர்ஷ்டம் தரும் வாரமாகவே இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமும், மனமகிழ்ச்சியும் இருக்கும். கடன் சிக்கல்களில் இருப்பவர்களுக்கு அதை தீர்ப்பதற்கான வழிகள் தெரிய ஆரம்பிக்கும். என்ன பிரச்னை என்றாலும் பணவரவு நன்றாக இருக்கும். யாருக்காவது ஏதாவது செய்து தருவதாக கொடுக்கும் வாக்கை காப்பாற்ற முடியும். முக்கியமான ஒரு விஷயத்தில் அன்னிய மத நண்பர் கை கொடுப்பார். மேஷம் எதையும் சமாளிக்கும் என்பதை உங்கள் செயல்களால் மற்றவர்களுக்குப் புரிய வைப்பீர்கள்.

ரிஷபம்: ரிஷப ராசிக்கு கெடுபலன்கள் இல்லாத வாரம் இது. குறிப்பிட்ட ஒரு பலனாக ஏழுக்குடைய செவ்வாய் இந்த வாரம் நட்பு வலுப் பெற்று குருவின் பார்வையிலும் இருப்பதால் வாழ்க்கைத் துணையால் கோர்ட்டுக்குச் சென்றவர்கள் சாதகமான தீர்ப்பை பெறுவதற்கான வழிகள் இப்போது பிறக்கும். எடுத்துக் கொள்ளும் அனைத்துக் காரியங்களும் லாபகரமானதாகவும், எதிர்கால நன்மைக்கு உபயோகப்படுவதாகவும் இருக்கும். புத்திரபாக்கியம் இல்லாதவருக்கு இப்போது கருவுறுதல் இருக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.

மிதுனம்: ராசிநாதன் புதனும், ராசியும் குருவின் பார்வையில் இருப்பதால் இது மிதுன ராசிக்கு சிறப்பான வாரம்தான். தொழில், வேலை, வியாபாரம் போன்ற ஜீவன அமைப்புகள் நன்றாக இருக்கும். வாரத்தின் இறுதி சந்திராஷ்டமமாக அமைவதால் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத நிலையிலும் சில விஷயங்கள் இருக்கும். மூன்றயமிடம் வலுப்பெறுவதால் இளைய சகோதரர்களால் சிலர் நன்மை அடைவீர்கள். பணவரவிற்கு குறை இல்லை என்றாலும் சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழல்கள் இருக்கும். நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

கடகம்: ராசியின் யோகர்கள் குரு, செவ்வாய், சூரியன் ஒரே நேர்கோட்டில் அமைந்து சுபத்துவ நிலையில் இருப்பதால் எதிர்ப்புகள் அனைத்தும் ஒழிந்து உங்களின் திறமையும், செயல்திறனும் வெளிப்படும் வாரம் இது. உங்களில் பிறந்த ஜாதக வலு இல்லாததால் கடந்த சில வாரங்களில் தொழில் நஷ்டம் வேலையிழப்பு போன்றவைகளை சந்தித்தவர்கள் இனிமேல் நல்ல மாற்றங்கள் நடந்து ஏற்கனவே இருந்து வந்தவைகளை விட நல்லதொழில், வேலை போன்றவைகளை அடைவீர்கள். அலுவலகத்தில் டிரான்ஸ்பர், பதவிஉயர்வுடன் கூடிய இடமாற்றம் போன்றவைகள் இருக்கும்.

சிம்மம்: ஏழில் குரு அமர்ந்து ராசியைப் பார்த்து வலுப்படுத்துவதாலும், ராசிநாதன் தனது வீட்டிலேயே வலுவுடன் இருப்பதாலும் பொருளாதார சிக்கல்கள் தீரும் வாரம் இது. உங்களில் சிலருக்கு தொழில் மாறுவது போன்ற பலன்களும் இருக்கும். ஏழாம் அதிபதி சனி ஆட்சி நிலையில் ஆறில் இருப்பதால் திருமணம் ஆகாதவர்களுக்கு அதற்கான ஆரம்பங்கள் நடக்கும். முதல் திருமணம் தோல்வியடைந்து வேதனையில் இருப்பவர்களுக்கு எதிர்கால நல்வாழ்விற்கான அடித்தளங்கள் அமையும். வாழ்க்கைத்துணையால் வளம் உண்டு.

கன்னி: இந்த வாரம் கன்னி ராசிக்காரர்கள் கையருகே சாப்பாடு இருந்தாலும் எடுத்துச் சாப்பிடுவதற்கு நேரம் இல்லாமல் உழைப்பீர்கள். குரு ஆறில் இருப்பதால் உங்களில் ஆன்மிகம் சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்களுக்கு ஏற்றம் தரும் நிகழ்வுகள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் செலவுகளும் விரயங்களும் இருக்கும். சிலருக்கு இளைய சகோதரரிடம் கருத்து வேறுபாடு வரும். ஜீவனஸ்தானம் வலுவாக இருப்பதால் தொழிலில் வருமானங்களுக்கு குறை இருக்காது. அரசு வேலையில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும்.

துலாம்: கடந்த சில நாட்களாக ராசிநாதன் சுக்கிரன் நீச்சனாக பனிரெண்டில் இருக்கும் நிலையால் துலாம் ராசிக்கு பொருளாதார ரீதியாக தடங்கல்களும், பணவரவுக்குத் தடையும், சிலருக்கு மன அழுத்தங்களும் இருக்கிறது. அதே நேரத்தில் பாக்யாதிபதி புதன் நல்ல நிலையில் இருப்பதால் இது வருமானம் வரும் வாரமாக இருக்கும். முப்பது வயதுகளில் இருப்பவர்களுக்கு இப்போது மாற்றங்களுக்கான விஷயங்கள் நடக்கும். மருத்துவத் துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றங்கள் இருக்கும். வெகுநாள் இழுத்து கொண்டிருந்த விவகாரங்கள் முடிவடைந்து பணவரவு உண்டு. பெண்கள் உதவுவார்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்கு வார ஆரம்பத்தில் மனக் குழப்பங்களும், முடிவெடுக்க முடியாத தடுமாற்றங்களும் இருக்கும். தொழில், வியாபாரம், வேலை முதலிய ஜீவன அமைப்புகளில் முன்னேற்றமான வகையில் நல்ல பலன்கள் நடக்கும். அலுவலகங்களில் இருப்பவர்கள் சிக்கல்கள் நீங்கப் பெறுவீர்கள். இன்னும் சில வாரங்களில் குரு மீண்டும் மூன்றாம் வீட்டிற்கு மாறி அங்கே இருக்கும் சனியுடன் இணையப் போவதால் கணவன்-மனைவி உறவுகள் மூலமாக நன்மைகள் நடக்கும். வாழ்க்கைத் துணையால் ஆதாயங்கள் இருக்கும். பிரிந்தவர்கள் இணைவீர்கள்.

தனுசு: தனுசு ராசிக்கு இதுவரை தொந்தரவு கொடுத்து கொண்டிருக்கும் பிரச்சனைகள் இந்த வாரம் தீரும். எதிர்ப்புகள் விலகும். சுக்கிரன் நீச்சனாக இருப்பதால் பெண் உறவுகளால் வீண் செலவுகளும் விரையங்களும் இருக்கும். எனவே இது சேமிப்பு செய்ய முடியாத வாரம். அதேநேரத்தில் வாழ்க்கைத்துணை வழியில் வரவுகளும், ஆதரவான நிலையும் இருக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான உறுதி நிகழ்ச்சிகள் இருக்கும். ஒரு சிலர் தங்களின் எதிர்கால வாழ்க்கைத்துணையை இன்னார்தான் என்று தெரியாமல் சந்திப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மகரம்: உங்களில் நடுத்தர வயதினருக்கு நன்மைகள் நடக்க தடைகள் ஏதும் இல்லை. இன்னும் நான்கு வாரங்களில் நடக்க இருக்கும் அதிசார குருப்பெயர்ச்சி உங்களுக்கு நன்மைகளை செய்யும் என்பதால் மகரத்திற்கு துன்பங்கள் எதுவும் இல்லை. பிறந்த ஜாதகத்தில் நன்மைகளைத் தரும் அமைப்புள்ள தசைபுக்தி நடப்பவர்களுக்கு யோகங்கள் உண்டு. தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புகளில் நல்லவைகள் நடக்கும். அலுவலகத்தில் சாதகமான மாற்றங்கள் இருக்கும். கொடுத்த கடன் திரும்பி வரும். பாக்கி வசூல் ஆகும்.

கும்பம்: ராசிநாதன் சனி விரையச் சனியாக பனிரெண்டாம் வீட்டில் இருப்பது அதிர்ஷ்டத்தினை தள்ளி வைக்கும் அமைப்புத்தான் என்றாலும் யோகாதிபதி புதன் வலுவாக இருப்பதால் தொழில் இடையூறுகளை சமாளித்து நீங்கள் வெற்றி பெறும் வாரம் இது. உங்களில் அதிகாரம் செய்யும் வேலையில் இருப்பவர்களுக்கு அலைச்சல் மிகுதியாக உண்டு. ஆனாலும் நல்ல பெயர் கிடைக்கும். செலவு செய்வதற்கு முன் யோசிப்பது நல்லது. ஆறுக்குடையவன் நீச்ச நிலையில் இருப்பதால் கிடைக்கும் வாய்ப்புக்கள் எதையும் சரியாகச் செயல்படுத்த முடியாத நிலையில் இருப்பீர்கள்.

மீனம்: மீன ராசிக்கு இருந்து வந்த தடை அமைப்புகளும் கணவன்-மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்துவேறுபாடுகளும் தீர்ந்து நன்மைகள் நடக்கும் வாரம் இது. உங்களில் சிலருக்கு மறைமுக இலாபங்கள் மற்றும் வருமானங்கள் இப்போது இருக்கும். சிலர் ரகசியமான காரியங்களை செய்வீர்கள். அவற்றில் வெற்றியும் பெறுவீர்கள். தந்தையின் ஆதரவும் ஆசிகளும் இந்த வாரம் உண்டு. தந்தையைப் பிரிந்து இருப்பவர்கள் அவரைத் தேடிச் சென்று நேரிடையாக அவரது ஆசிகளைப் பெற்று வாருங்கள். அனைத்தும் சிறக்கும்.